Archive for the ‘Uncategorized’ Category

குறையொன்றுமில்லை

தும்பிகள் மொய்க்கும்
தட்டாங்குளத்தின் மய்யலில்
வந்தமர்ந்தது ஒரு
கருப்பு வெள்ளை வண்ணத்துப்பூச்சி…
பின்விளைவின் தகவுகளற்ற
சிறகடிப்பின் வியப்பு
தற்செயலாய்ப் பார்த்தது,
கால்களினின்று விளைந்த
நீர்ச்சலனத்தின் சித்திர வளையங்களை
கிழக்குப் படித்துறையில்
பையச் சிலிர்த்தடங்கியது
சிறகொடிந்த செண்பகப் பறவையொன்று

– பாலகுரு முரளிதரன் (இங்கிருந்து)

இயற்கையின் முன் அமர்ந்திருப்பது நம்மை மிகச்சிறியவர்களாக நம்மையே உணரச்செய்வது. பேருலகின் முடிவற்ற நடனத்தின் ஒரு துளியென்று நம்மை அஞ்சச் செய்வது. எளிய செயல்கள் மீதான எளிய அகங்காரங்களை உடைத்து இன்னும் சிறிய இன்னும் சிறியவென நம்மைப் பகுத்து நுண்மையாகக் காட்டுவது. பெரும் போராட்டமென வாழ்வின் ஓட்டங்களில் ஓடிக்களைத்து இடைவெளிகளில் அமர்ந்திருக்கும்போது இருக்கும் வரை உணவென மாறிலியில் திளைத்திருக்கும் உயிர்களின் வளி நம்மை ஏளனம் செய்வது. யானை மீதும் கடல் மீதும் வானம் மீதும் மனிதர்கள் கொள்ளும் காதல் அவர்களை சிறுமை செய்யும் பிரம்மாண்டமும் கூடத்தானே?

எளிய அசைவுகள் சிறிய சொற்கள் சின்ன புறக்கணிப்புகள் பல மரணங்களை உருவாக்கியிருக்கின்றன. இங்கிருந்து நீங்கிச் செல்கிறவர்கள் இங்கிருந்து புண்பட்டே செல்கிறார்கள். நிறுவனங்களிலிருந்து அல்ல, மனிதர்களிடமிருந்தே மனிதர்கள் விலகிச் செல்கிறார்கள். எளிய சொற்கள் அவர்களின் அகங்காரத்தைத் தைக்கும் முள்ளாக இருக்கின்றன. நீங்கிச் சென்றவர்கள் திரும்பி வர அஞ்சுகிறார்கள். புறக்கணிப்பின் இறுதிக்கணத்தில் அறுத்து வெளியேறும் நொடிகளின் வலிக்கு அவர்கள் திரும்பி வர விரும்பவில்லை. அந்தச் சொற்கள் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன என ஒருமுறையாவது சலித்துச் சொல்லாத யாராவது இருக்கிறார்களா?

நிலை எதிர்நிலை இரட்டைகளில் அத்தனை அழிவுகளும் தொடங்குகின்றன. தான் பிறர் என்ற பகுப்பிலிருந்துதான் அநீதிகள் தொடங்குகின்றன. இடையில் அல்லது ஒன்றென எல்லாம் உருமாறுதல் குறித்த சிந்தனைகளை நாம் கைக்கொள்ள முடிவதில்லை. சிறிய பகுப்புகள், சிறிய வேறுபாடுகள், சிறிய விலக்க்கங்களின் வழி பெரிய போர்கள் விதைக்கப்படுகின்றன. சிறிய சொற்களிலிருந்து பெரும் விவாதங்கள் உருவாகின்றன. சொல்லஞ்சி வாழ்தல் என்பது சிறுமையென புகுத்தப்பட்டபின் எதிரிகள் ஒரு போதும் நல்லவர்களாக இருக்க முடியாதென முடிவெடுத்தபின் எந்தக்கதவும் எந்தத் திசையிலும் திறக்க முடியாதது தானே?

 

Advertisements

அவள் பெயர் எனக்கு தெரியாது

முழு நிலவு நாளில்
கடற்கரை செல்லும் போதெல்லாம்
அந்த சிறுமியை பார்ப்பேன்.
கரையில் விளையாடிக் கொண்டிருப்பாள்
சக குழந்தைகளுடன்.

யாரென வினாவினேன்.
பதிலாக, ஓர் பறவையைப் பற்றிச் சொல்லத் துவங்கினாள்.
சிறகசைக்காமல் ரொம்ப தூரம் பறக்கும்..
சிச்சிறுமிகளை கண்டால் கொண்டாட்டம் கொள்ளும்..
கடல்நீரில் உப்பை பிரித்து நன்னீராய் அருந்தும்
அழகுடல்
நீளிறகு
செங்கால்
மஞ்சள் கூர் மூக்கு
இன்னும்.. இன்னும்..

முழு நிலவிலிருந்து அந்தப் பறவை உதித்ததாம்.
இருகைகளாலும் அளந்தபடியே
நிலவிலிருந்து பறந்து வந்ததென
மண்ணில் பாவித்தபடியே கூறினாள்.
பிரதி மாதம் அதேநாளில்
விருப்ப மனிதஉருகொள்ளுமாம்.
கால் மட்டும் ஒன்றாம்..
ஏனென்றேன்
நிற்கத்தானே.. ஒன்று போதும்
சொல்லிய கணத்தில் மஞ்சள் நிறமாய் மினுக்கினாள்
பறவையின் பெயரை சொல்லவே இல்லை.
அவள் பெயரும் எனக்குத் தெரியாது.

– வேல்கண்ணன் (இங்கிருந்து)

முகமற்றவர்கள் பெயரற்றவர்கள் அடையாளமற்றவர்கள் நமக்கான சொற்களை வைத்திருக்கிறார்கள். சிறு அசைவுகளில் நம் காலத்தின் அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்து நமக்கு அளிக்கிறார்கள். பெரும்பயணத்தின் இறுதியில் நாம் சென்று சேரும் இடங்களில் நாம் காணும் முகங்கள் நமக்கானவை என்பதான மயக்கத்தை ஏற்படுத்துகின்றன. முகம் தெரியாதவர்களுடன் எந்த தயக்கமும் இன்றி எந்த நாடகங்களும் இன்றி எதிர்பார்ப்புகளின்றி அன்பு செய்ய முடிகிறது. அறிந்தவர்கள் அவர்கள் குறைகளுடன் சேர்ந்து ஞாபகம் வரும் நாளில், குறைகளற்றவர்களென நாம் நம்ப முடிவது நாம் அறியாதவர்களை மட்டும்தானே?

அடையாளமற்றவர்கள் அந்த எல்லையிலேயே நிற்க விரும்புகிறார்கள். பெயர்கள் குறித்து அவர்களுக்கு அக்கறை இல்லை. உண்மையில் பெயர்கள் நினைவுகளுடன் இணைந்திருக்கின்றன. பெயர்கள் ஞாபகங்களுடன் இணைந்தே மேலெழுகின்றன. நிலங்களிலிருந்து மட்டுமல்ல அடையாளங்களிலும் வெளியேறுதல் குறித்த கனவுகள் நமக்கு இருக்கின்றன. பெயர்களிலிருந்து விலக்கிக்கொள்வது அடையாளங்களிலிருந்து விலக்கிக்கொள்வதாக இருக்கிறது. முகமற்ற இடத்தில் ஒரு சக உயிராக தங்கிவிடுவது குறித்த ஏக்கங்கள் ஒளிந்திருக்கின்றன. அதுவேதான் பெயரற்ற சிறுவர்கள் மீதான நமது முடிவற்ற அன்பிற்கும் காரணமாக அமைகிறதா?

குழந்தைகளின் கனவுகள் பெரிதாயிருக்கின்றன. எல்லாவற்றையும் சிறுகுவளையில் கைப்பற்றிவிடும் ஆசை அவர்களுக்கு இருக்கிறது. எல்லாவற்றையும் ஒற்றை ஜன்னல்வழியே கண்டடந்துவிடும் வேகம். அவர்களின் பொய்கள் அழகானவை. அதன் நீள அகலங்களின் முடிவிலி அருகமர்ந்து புன்னகைக்ககூடியது. சில நேரங்களில் அவர்களே தெய்வங்களாகின்றனர். சில நேரங்களில் வானத்தைச் சொந்தமாக்கிக்கொண்ட பறவையாகவும். விலகியோடுகிறவர்களுக்கு பறவைகள் தேவையாயிருக்கின்றன. குழந்தைகள், மற்றும் தெய்வங்கள். நாடகங்களிலிருந்து வெளியேறுகிறவர்களின் ஆசுவாச தெய்வங்களின் முகமென்பது குழந்தைகளாக இருக்கக் கூடுமென்றாலும், உறவிலிருந்து வெளியேறுகிறவர்கள் குழந்தைகளுடன் பெறும் உறவினைவிட்டு எப்படி வெளியேறுவது?

 

#t1kavithai – நளன்

Posted: August 10, 2017 in Uncategorized

நீ வேறு யாருடனோ மகிழ்வுடன் இருக்கும்
புகைப்படத்தைப் பார்த்தப்பின்
குளியலறையின் வெந்நீரூற்றில்
சுமார் அரைமணி நேரம் அப்படியே நின்றிருந்தேன்
பின்வேளை
ஆவி படர்ந்த குளியலறைக்கண்ணாடியில்
உன் பெயரெழுதிப் பார்த்தேன்
இந்நாட்களில்
நாம் தொடர்புகொள்வதில்லை
முயல்வதுமில்லை
உனக்குள் இருக்குமோ
சுட்டு வலிக்கும் மாலை நேரத்து நினைவு
இந்த மன அழுத்தம்
இந்த கோடையில்
ஒரு சலனமுமற்று இருக்கிறாய் நீ
நானோ
உனை நீங்கும் மனவுறுதியற்று
ஒரு கிளையைப் போல
உடைந்து தொங்குகிறேன்
நீங்கிய இலைகளை
மெல்ல கலைக்கிறது இந்த காற்று.

– நளன் (இங்கிருந்து)

பிரிவின் மன அழுத்தம் குறித்து பலகோடி வரிகள் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டிருக்கின்றன. எழுதவிரும்பும் , எழுதத்தெரியாத அத்தனை பேரும் அந்தப்புள்ளியை ஒரு முறை கடந்துவந்திருக்கிறார்கள். தனது முதல் வாழ்வனுபவமென ஒவ்வொருவரும் அந்தப்புள்ளியில் செயலற்று நின்றிருக்கிறார்கள். எழுதுகிறவன் தன் முதற்சொல்லாக பிரிவை எடுத்துக்கொள்கிறான். வாசிக்கிறவன் தனது முதல் வரிகளாக பிரிவு குறித்த சொற்களைத்தான் கண்டடைகிறான். வலிகளிலிருந்து வெளியேற விரும்புகிறவர்கள் வலிகுறித்த சொற்களுடன் உரையாடித் தன்னை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். ஒரு சொல் பிரிவின் பிறிதொரு சொல்லை நீக்கிவிடும் எனும் மயக்கம் தரும்போது அதைத் தேர்வது வழக்கம்தானே?

பலமுறை பிரிவின் உளவியல் பிரித்து அடுக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் இச்சையும் ஆங்காரமும் இணையும் புள்ளியில்தான் பிரிவாற்றாமைகள் நிகழ்கின்றன என சொல்லியிருக்கிறார்கள். ஆணவம் அடிபடும் காலத்திலிருந்துதான் புனிதமான அன்பு என்ற கற்பிதம் பிறந்து வருகிறது. தன்னை மிக உயரத்தில் வைத்த இடத்திலிருந்து யாரோ ஒருவர் எளிதாக தள்ளிவிட்டுச் செல்வதை அகம் ஏற்றுக்கொள்வதில்லை என்கிறார்கள். நமக்கான சிறந்த பழிவாங்கும் முறை பிறர் ஆணவத்தை உடைப்பதாகத்தானே இருக்கிறது?

 

வீழ்தலுக்குப் பிறகு நம்மை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. கழுவித்துடைத்து புதுப்பித்து நம்மை நமக்கே அறிமுகம் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. பிறருக்கு நான் இன்று முதல் வேறுமுகம் பூண்டிருக்கிறேன் எனக்காட்டவேண்டியிருக்கிறது. ஆனாலும் ஆழத்தில் ஒரு பெருமீனைப்போல நீந்திக்கொண்டிருக்கிறது வலிகள். அவற்றின் மீது அலைகளை உருவாக்குவதன் மூலம் அம்மீனின் இருப்பை மறைக்கவேண்டியிருக்கிறது. வெளியேறுவதைவிட வெளியேறிவிட்டதை அறிவிப்பது அவசியமாக இருக்கிறது. பிறருக்கான கதவுகளைத் திறப்பதற்காக அன்றி, நமது வெளியேற்றத்தை அறிவிப்பதற்காகத்தானே நம் கதவுகள் விரிய திறந்திருக்கின்றன நெடுங்காலத்திற்கு?

இரவு
நிறத்தை இழந்து கொண்டிருக்கிறது.
நிறத்தை இழந்து கொண்டிருக்கும் இரவின்
நாளைய
புதிய நிறத்தைப் பற்றிய
விவாதங்கள் தொடர்கின்றன

கருமை மறைக்கப்பட்டால்
நிலா
நட்சத்திரம்
மினுமினுப்பை இழக்க நேரிடும்.
காலங்கள் அதிவேகமாய் ஓடி வருகின்றன
இரவின் நிறத்தைப் பிடுங்கிச் செல்ல

– வீ.மணிமொழி (இங்கிருந்து)

 

தனிமையின் பேரடையாளம் இரவு. மெளனத்தில், விலக்கப்பட்டு , விலகி அமர்ந்திருப்பவர்கள் இரவில் தன் முழு உருவத்தில் இருக்கிறார்கள். உறங்காத இரவுகள் எல்லாமும் பேரழிவுகளின் நினைவுகளைக் கொண்டவையாக இருக்கின்றன. இருள் மறைக்கப்பட்டவற்றின் அடையாளமாக இருக்கின்றன. மறந்துவிட்டதாக, விலகிவிட்டதாக, எடுக்கப்படும் அத்தனை நாடகத்தின் நிஜமுகங்களும் இரவில் வெளிவருகின்றன. பேரிருளின் தனிமை நம் முகமூடிகளை கழற்றவைக்கிறது. ஆடைகளற்ற பெரு நிர்வாண மனத்திலிருந்து கசடுகள் தன் முகம் இருள் பட வெளிவருகின்றன.யாரும் பார்க்காத இடங்களில்தானே நாம் நாமாக இருக்க முடியும்?

தோல்விகளில் அணைத்துக்கொள்ளும் இரவுகள் தூரத்து வெளிச்சங்களைச் சொல்லி ஆற்றுப்படுத்துகின்றன. மீண்டும் விடியுமென நமக்கான நம்பிக்கையை இரவுகள் ஒளித்துவைத்திருக்கின்றன. மீண்டும் இந்தக்கனவுகள் நிறைவடையும் ஒரு நாள் விழித்தெழுவோம் யாரும் நம்மை அழிக்க எத்தனிக்காத பகல் ஒன்று தொலைவில் தெரிகிறது. சோர்வுகளின் சாத்தியங்களை நீக்கி மறு நாளைக்கான மனங்களை இரவுகளை மீண்டும் உருவாக்குகின்றன. யாரும் காணாத இருளுக்குள் நம் கண்ணீர் தொலைந்து போகச் செய்வதில் அகங்காரங்கள் தோற்பதில்லை என்பதுதானே காரணமாக இருக்கமுடியும்?

வெற்றிகளிலிருந்து தோல்விக்கு மீளவேண்டியிருக்கிறது. பகல்களிலிருந்து இரவுக்கு வந்து சேரவேண்டியிருக்கிறது. சுழலின் உயரப்படிக்கட்டுகளில் ஏறுகிறவர்கள் மறு இரவிலேயே மீண்டும் இறங்கவேண்டியிருக்கிறது. கடிவாளமிட்ட குதிரைகள் தன் பாதை மாறாமல் சுற்றிவருகின்றன. செல்லும் எல்லாம் திரும்பி வரும் என்ற நம்பிக்கையை இரவுகள் அளிக்கின்றன. எல்லா இருளும் மீண்டும் ஒளிகொண்டு துலங்குமென நம்பிக்கை உருவாகிறது. அத்தனை மனிதர்களிடமிருந்தும் விலகி நாமே உருவாக்கும் அழகிய இன்னல்களற்ற கனவிற்குள் நம்மால் புகுந்து கொள்ள முடிகிறது. நாம் வாழவிரும்புவது நம்மை ஆற்றுப்படுத்தும் ஒரு பொய்க்குள்ளாகத்தானே?

கனவின் நீட்சி

நெரிசல் மிகுந்த
சாலையில்
மெல்ல நகரும்
பேருந்தின் கம்பியில் சாய்ந்தபடி
தன்னைமீறி வழிந்து பெருகும் கண்ணீருக்கும்
சற்றுமுன் கைதவறி
விழுந்து உடைந்து துர்நாற்றம் பரப்பும் அந்த கனவிற்கும்

நம்புங்கள்
எந்த சம்பந்தமும் இல்லை

 

– இலக்குவண் (இங்கிருந்து)

 

எல்லா சந்திப்புகளிலும் யாரோ ஒருவர் தனித்திருக்க விரும்புகிறார்கள். பேருந்துகளில் ஒருவர் கடைசி வரிசையில் ஜன்னலுக்கு வெளியே வெறித்தபடி அமர்ந்திருக்கிறார். நண்பர்களின் சந்திப்பில் ஒருவர் எதுவும் பேச வார்த்தையின்றி மெளனத்து அமர்ந்திருக்கிறார். குடிகொண்டாட்டங்களில் ஒருவர் தன்னைத்திறந்துகொள்ளாமல் எல்லாரையும் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். படகுகளில், விமானங்களில், வீடுகளில், தெருக்களில், அலுவலகத்தில், பாதைகளில், கரையோரங்களில் யாரோ ஒருவர் நிச்சயம் தனித்து விடப்பட்டிருக்கிறார். தனித்திருக்கிறவர் சொற்களை விழுங்கியபடி மெளனத்த்தில் ஆழ்ந்திருக்கிறார். நாமும் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் அப்படி அமர்ந்திருந்தவர்கள்தானே?

கனவுகளைத் தவறவிட்டவர்கள் மீண்டுவர காலம் தேவைப்படுகிறது. நொறுங்கிய கண்ணாடிகளை முகம்தெரியும் அளவிற்காவது கோர்த்து வடிவத்திற்குக்கொண்டுவர. வீழ்ந்த காகிதக்கோட்டைகளை மெல்ல அடுக்கி மீண்டும் எடுத்து வைக்க. நம்மை நாமே தொகுத்துக்கொள்ள. நமக்கான கனவல்ல. நமது கனவல்ல. நம்மில் எந்த இழப்பும் இல்லை. நமக்கான காலம் எங்கோ தொலைவில் இருக்கிறது. பொய்களின் வழி, பிம்பங்களின் வழி நம்மை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. இடம் நீங்கிச் செல்பவர்கள் திரும்பி வருவதற்கான பாதைகளை அடைப்பதைப்போல நம்மை நாமே நம் கனவுகளிலிருந்து அடைத்துக்கொண்டு வெளியேற வேண்டியிருக்கிறதுதானே?

கண்ணீர் ஒரு பெரும்புதையல். தகுதியற்றவர்களுக்க, தகுதியற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளமுடியாத ரகசிய புதையல். ஆனாலும் மனம் மூளை போராட்டங்களை கண்ணீர் வழியாகத்தான் வெளியேற்றவேண்டியிருக்கிறது. அதற்குத்தகுதியானவர் முன்பாக, அறிந்து கொள்வதில் தவறில்லை என நாம் நம்பும் உயிர்களுக்கு முன்பாக சிறிது கண்ணீர் பகிர்வதில் ஆசுவாசம் கிடைக்கிறது. கண்ணீர் நம்பிக்கையானவர்கள் முன்பாக தாள்பணியும் நம் ஆயுதமா இருக்கிறது. வெளியேற விரும்பும் மனிதர்களுக்கு முன்பாக நாம் ஒருபோதும் கண்ணீர்விடுவதில்லைதானே?

இறந்த மீன்களின் கண்களென

குஞ்சுகள் பின்தொடர
குப்பையில் இறை தேடிய
கோழியின் கழுத்து
மளுக்கென திருகப் பட
சின்ன உடலில் ஒளிந்திருந்த
உயிர் கண்வழியே வெளியேறியது
தழைகளை அசைபோட்டபடி இருந்த ஆடு
ஒரே வீச்சில் கழுத்து அறுபட ,
நிலைத்த கண்களின் வழியே
உயிர் பயம் காட்டி அடங்கியது
றெக்கை முறிபட்ட பறவை
ஒருவர் கையிலும் சிக்கிவிடாமலிருக்க
இலைகளினூடே மறைந்து கொண்டது
சில நினைவுகளையும்
நெகிழ்ந்த காமத்தையும்
உயிரினுள் பொதித்து
மறைத்து வைத்தேன்

இறந்த மீன்களின் கண்களென
துருத்தி இருந்தது
காலம்

– இன்பா சுப்ரமணியன் (இங்கிருந்து)

காமம் பாவமென மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சொல்லப்படும் கதைகளிலிருந்து காமத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி நூறு ஆண்டுகள் நிறையவில்லை. திறந்த உண்மைகளை விட மூடியெ பெட்டகங்களென ரகசிய அறைகளுக்குக் கடத்தப்பட்ட காமம் அதிக ஆர்வமூட்டுவதாக இருக்கிறது. காலம் தோறும் அதன் முகங்கள் மாறிவந்திருக்கின்றன. புதிய விதிகளின் முதல்வேலையென காத்திருக்கிறது பழைய விதிகளை ரத்து செய்தல். மறைத்து வைப்பதன் மூலம் உருவாகும் வெற்றிடங்களில் மாறிலிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ஆதார உணர்வுகளிலிருந்து அவற்றை மறைப்பதன் மூலம் விலகியிருக்க முடியும் என நம்பப்படுகிறது. ஆழத்தின் ஆதிமிருகம் நிஜமாகவே நம்மிடமிருந்து விலகிவிட்டதா என்ன?

மறுக்கப்பட்ட காமம் உருவாக்கும் ஆங்காரங்கள் கட்டுப்பாடற்றவையாக இருக்கின்றன. அழிவின் ஆயிரம் வாசல்களில் ஒன்றாக காமம் இருக்கிறது. உணவு அல்லது காமம் மறுக்கப்பட்ட மனம் ஆழ் விலங்கின் சாயலில் இருக்கிறது. காலங்களை நீட்டிக்கும் சொற்களின் வழியாக காமத்தைக் கடந்து செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது. அத்தனை அடையாளங்களையும் துறக்க நினைக்கிறவர்களும் தன் ஆழத்தின் இச்சைகளிலிருந்து வெளியேறி விடவில்லைதானே?

மரணமும் காமமும் பிணைக்கப்பட்டிருப்பது குறித்த அவதானிப்புகள் வரலாற்றில் எங்கும் காணக்கிடைக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்று விலகுவதே இல்லை. ஒன்றில் விலக்கப்பட்டவர்கள் மற்றதில் எந்த சிந்தனையுமின்றி போய் அடைந்துகொள்ள விரும்புகிறார்கள். அனாதி கால வரலாற்று நியாபகமாக இந்த இரண்டு மட்டுமே எஞ்சியிருக்கின்றன. வாழ்வின் இன்னபிற அத்தனை கதைகளும் எத்தனை காமம் எத்தனை மரணம் என்ற இரட்டைக்கேள்விகள் முன்பாகத்தான் கைகட்டி நின்றுகொண்டிருக்கின்றன.
அத்தனை கனவுகளுக்கும் ஆரம்பமாக காமமும் இறுதியாக மரணமும் வந்தடைகின்றன. வரலாற்றின் முடிவற்ற சுழலின் இரு தாங்கிகள் ஒன்றுக்கொன்று இணையாகவும் சமமாகவும் இருந்தாகவேண்டியிருக்கிறதுதானே?

வாழ்வறு நிலை

மனதின்
சல்லி வேர்களில்
விழுந்து கொண்டேயிருக்கும்
நிகழ்வுகளின் கோடரி

கனவுப் பொதியில்
தீப்பற்றியெரிய
கேட்பாரற்றுக் கூச்சலிடும்
ஆன்மா

பசிவாடை வீசும்
நகரத் தெருக்களில்
அலைந்த கால்களில்
பிசுபிசுக்கும் நிராகரிப்பு

துயர வெளிகளில்
நைந்து நைந்து
துளிர்விடத் தயங்கும்
நம்பிக்கை

திசைகளெங்கும்
அறைவாங்கி
துடித்துவிழும்
உயிர்ப்பறவை

இக்கவிதையே
பற்றுக் கோடானால்
கழியுமோ
பிறவிப் பெருங்கடல்

முளைக்குமோ கருகுமோ
பாலை மணலில்
புதைந்த விதையாய்
கிடக்கும் வாழ்வு

– வே. ராமசாமி (இங்கிருந்து)

கண்ணெதிரிலேயே ஒரு பெருங்கூட்டம் நகரங்களுக்கு இடம்பெயர்ந்துகொண்டிருக்கிறது. நகரவாசிகள் மெல்ல மெல்ல ஒதுங்கி புற நகர்களை அடைந்து கொண்டிருக்கிறார்கள். நகரத்திற்கும் புற நகரங்களுக்கும் இடையில் கண்ணுக்குத்தெரியாத ஒரு சுவர் எழும்பியிருக்கிறது. அத்தனை தொலைவுகளை அதன் செலவுகளை சந்திக்க இயலாதவர்கள் இடிந்த வீடுகளின் நினைவுகளைச் சுமந்தபடி குடிசைகளில் கைவிடப்பட்ட குழாய்களில் தெருவோரங்களில் தங்கியிருக்கிறார்கள். அவர்களின் இடம்பெயர்தல் கவனிக்கப்படாத ஒரு இலையுதிர்தலைப்போல நகரமெங்கும் வீழுந்து கொண்டிருக்கிறது. அவர்களின் நகரத்தை அவர்களிடமிருந்து பறித்து யாருக்குக்கோ கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் யாராக இருக்கிறார்கள்?

பகலெல்லாம் பெயரற்ற வேலைகளுக்காக ஆயிரக்கணக்கான கால்கள் நகரங்களில் நடந்துகொண்டேயிருக்கின்றன. பெருவாகனங்களிலிருந்து பெருவாழ்விலிருந்த் மெல்ல மெல்ல ஒதுங்கி சிலர் தன் அடுத்த படியில் சோர்ந்து அமர்ந்திருக்கிறார்கள். வாழ்ந்த காலத்தின் நினைவுகளிலிருந்து தப்ப முடியாதவர்கள் தன்னை யாரும் அறியாத இன்னொரு நகரத்திற்கு இடம்பெயர்கிறார்கள். அ ந் நகரத்திலிருந்து இங்கே வருகிறர்களும் இங்கேயிருந்து அங்கே செல்கிறவர்களும் ஒருவரை ஒருவர் சொல்லாமலே அறிந்திருக்கிறார்கள். ரயில் நிலையங்களில், பேருந்து நிலையங்களில் தனது எரியும் கொசுவத்திச் சுருளை அருகில் படுத்திருப்பவனுக்குமென நகர்த்தி வைக்கும் சிறு கைகளை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

ஒரு பெருமரத்தின் தளிரென தன் உறங்கும் குழந்தைகள் விழித்தெழும் முன்னர் நகர் நீங்கும் மனிதர்களை மொழிகள் இன்னும் அறியவேண்டும். அரசியலற்ற அரசியல்களுக்கு வெளியே எதன் மீதும் பற்றின்று நகரமெங்கும் இடைவெளியெற்று நடந்து சோர்ந்த நிலத்தில் பாய்கள் மறைக்க உறங்கும் கால்கள் கணக்கெடுக்கப்படவேண்டும். சொற்களற்று விதியென்றும் மதமென்று பாவமென்று தனக்கான சமாதனங்களை தனக்குள் உருட்டியபடி தூக்கமின்றி விழித்திருக்கும் கண்களுக்கு சில மில்லி போதைகள் போதுமானதென்ற சமாதானங்கள் எப்பொழுது உருவாகத்தொடங்கின என்றறிந்திருக்கிறோமா?

நிழல் பறவை

காகங்களைப் பார்க்கும்போதெல்லாம்
ஓர் அழகிய பறவையின்
நிழலே தெரிகிறது

ஒவ்வொரு காகத்தின் மேலும்
ஓர் அழகிய பறவை
பறந்துகொண்டிருக்கிறது.

– குகை மா.புகழேந்தி (இங்கிருந்து)

 

நிறங்களின் அரசியல் உலகளாவியது. பெரும் வரலாறும் பேரழிவும் பிணைந்திருப்பது. அத்தனை நிறங்களுக்கும் அது சார்ந்த அழுத்தங்கள், குழப்பங்கள், பெருமிதங்கள், மனவிலக்கங்கள் உண்டு. ஒற்றை உண்மை ஒற்றை தர்மம் ஒற்றை நேர்மை இல்லாத கணங்களில் அவரவர் கைமணல் எண்ணிக்கைக்கேற்ப அலையும்போது அதன் வீச்சு வரலாறெங்கும் பதிவாகியிருக்கிறது. தமிழ்ச்சுழலில் மிகச்சமீபம் வரை அதுகுறித்த எந்த அக்கறையின்றி இருக்கிறோம். அதைப்பற்றிய எந்த புரிதலும் நம்மிடையே இல்லை. நாம் கூட இழிபுன்னகையை அளிக்கும் அதே முகத்துடன் பெற்றுக்கொள்வதில்லைதானே?

சாயல்களுக்கும் நிழல்களுக்குமான காலத்தில் வாழ்ந்திருக்கிறோம். அத்தனையும் எதொ ஒன்றின் மாறிலியாக இருக்கிறது. அத்தனையும் எதோ ஒன்றை நிறைவு செய்யும்பொருட்டு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அத்தனை உறவுகளையும் பிற உறவுகளால் நிறைவு செய்யவேண்டியிருக்கிறது. காலத்தின் முகங்களில் உருவாக்கும் மாறுதல்களை சிறு அழகூட்டிகளால் மறைத்து மெருகேற்றவேண்டியிருக்கிறது. உடனிருக்கத் தேரப்பட்ட ஒவ்வொருவரும் விலகிப்போன யாரோ ஒருவருக்கான சாயல்கள்தானே?

 

சாயல்களை உருவாக்குகிறவர்கள் நிஜங்களை பதிலீடு செய்யும்பொருட்டு வருகிறார்கள். மெல்ல மெல்ல தனக்கான தனி முத்திரைகளை உருவாக்கி அளிக்கிறார்கள். தனது கனவுகளை தனது ஓவியங்களை தனது வண்ணங்களை விட்டுச் செல்லும் சிறு உயிர்கள் மீண்டும் வருகின்றன சாயல்களின் ஊடாக. தங்கள் நினைவுகள் மட்கி அழியும் வரை அசைந்தாடி நின்றிருக்கும் காளான்போல. அத்தனை மழைகளும் அத்தனை ஈசல்களும் இங்கிருந்தே எழுந்து வருகின்றன. இங்கேயே திரும்பிச் செல்கின்றன. இடைவெளியில் பறக்கும் பறவை விட்டும் நிழல்கள் அல்ல, கற்பனையின் அதீதப்பறவைகள்தான் தொடர்ந்து காத்திருக்கவைக்கின்றன இல்லையா?

புயல் நாளொன்றில்

சீறும் பெருங்கடல் முன் நானும் அவனும்
கண்களுக்குப் புலப்படா நட்சத்திரங்களென
கரைமீதிருந்தோம்

என் மீதான கவிதையொன்றை
அவன் சொல்லத் தொடங்கிய போது
கண்ணாமூச்சியாடிக் களைத்த நண்டுகள்
வளைகளை மறந்து அவன் காலருகே
கொடுக்குகள் தூக்கி நின்றன

கரங்களிலிருந்த கோப்பையின்
வெள்ளை ஒயினில் கடலின் ஒருதுளி
கலந்து அருந்தினோம்

முத்தமிட்ட கணத்தில் மூக்கின் மீதோடி
உதட்டில் இறங்கியதோர் சின்னத் தூறலின் துளி

காற்றும் மழையும் கடலும் மதுவும்
எதிரெதிரே மோதிய அலைகளில்
நுரைகளாலான டிராகன்களின் பெருயுத்தம்

யாரோ பெரிய பெரிய பாறைகளை
கடலின் ஊடே எறிய நடுங்கின என் சொற்கள்

மெல்லிய உள்ளங்கைப் பற்றுதலில்
திடீரென அகன்று விரிந்தது நீர்ப்பரப்பு

கரை சூழ்ந்த கடலில் கரங்களைப் பிணைத்தபடி
உயர்ந்தெழும் அலைகளின் மீதான பரவசத்தில்
நீந்தினோம் புயலின் பயமற்று.

– தாரா கணேசன் (இங்கிருந்து)

 

தொலைதல் எல்லாருக்கும் தேவையாய் இருக்கிறது. திரைப்படங்களின் அதீதங்களை ஒத்த கனவுப்பிரதேசங்களுக்கு திரை இணைகளை ஒத்த துணைகளுடன் அல்லது அப்படி நினைத்துக்கொள்கிறவர்களுடன் ஒரு பயணம் தேவையாய் இருக்கிறது. இணையத்தின் மெய் நிகர் சச்சரவுகள் இல்லாத ஒரு பொழுதில், வாழ்வின் பழைய நினைவுகளை மீட்டுருவாக்கும் காலத்தில் போய் அமர்ந்து கொள்ள எல்லாருக்கும் வேட்கையிருக்கிறது. தினசரிகளின் சலிப்பிலிருந்து வாழ்வின் சலிப்பிலிருந்து நிஜங்களின் சலிப்பிலிருந்து வெளியேறி நின்று பார்க்கும்படியான காலம் எல்லாருக்கும் விதிக்கப்பட்டிருக்கிறதா என்ன?

தப்பிச்செல்கிறவர்கள் தன் பயங்களை தன்னுடன் எடுத்துச் செல்கிறார்கள். இடைவெளிகளை உருவாக்கியவர்கள் நினைவுகளைச் சுமந்தே எங்கும் அலைகிறார்கள். மெளனத்திலிருப்பவர்களிடம் ஏராளமான சொற்களிருக்கின்றன. இடைவிடாத போர்கள், இடைவிடாத முரண்கள் தொடர்பற்ற கணங்களில் எழும் கூரிய நினைவுகள். போதைகள் பயணங்கள் கேள்விகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று பிணைந்து குழம்பி தன் இருப்பிடங்களை உருவாக்கிக்கொள்கின்றன. ஒரே ஒருவருக்கான உலகங்களை தனக்காக உருவாக்கிக்கொண்டவர்கள் ஒருபோதும் பிற பாதைகளை அறிவதேயில்லை.

கனவு இணைகளுக்கு நடுவேயும் பிணக்குகள் உருவாகி மறைகின்றன. அகங்காரங்களின் பாதை வழியாக வெளியேறி எதிர்பாராத இடங்களை அடைந்த பிறகு திரும்பிப்பார்க்கும்போது இடைவெளிகள் நிரப்பவியலாதக இருக்கின்றன. மூன்றாம் நபர்களின் சொற்கள் , இரண்டு மனங்களின் தயக்கங்கள், ஒற்றை மனத்தின் பயம் போதுமானதாய் இருக்கிறது எந்தச் சங்கிலியையும் அறுத்து எறிவதற்கு. பிணைப்புகள் அற்ற ஆரம்பக்காலங்கள் எளிதானதாக காட்சியளிக்கின்றன. மெல்ல மெல்ல இருள் கவிகிறது. வெளிச்சம் ஒரு நாள் திரும்பி வரும், அலை மீண்டும் கால் நனைக்கும் என காத்திருப்பது அல்லது இன்னொரு கடலுக்கு விலகிச் செல்வது அவரவர் தேர்வுகள்தானே?

நிழல்

புதைக்கப்பட்ட பயத்திலிருந்து
முளைக்கிறது பொய்
வளர்ந்து நிற்கும் பொய்யின் சாயல்
வெயிலில் காய்ந்து தற்காலிக
ஆறுதலை
கசிகிறது மரவெளியில்.

நிழலென பெயரிட்டு அதில் மெய்யை
ஆசுவாசப்படுத்திக் கொள்ள…
ஆசுவாசமே உரமாகிப்போகிறது
பயத்தின் வேருக்கு.

புவியெங்கும் படர்ந்து அசைந்து
கொண்டிருக்கிறது –
இருத்தல் அரங்கின்
திரைச்சீலைகளாய் நிழல்கள்…

ஒரு மெய்யை இப்படித்தான்
பொய்யின் மூலம்
சொல்லவேண்டியுள்ளது.

 

–  அமிர்தம்சூர்யா (இங்கிருந்து)

 

ஒற்றைப்படுத்தப்பட்ட மெய்யென்றும் பொய்யென்றும் எதுவுமில்லை என்ற தத்துவம் மீண்டும் மீண்டும் நம்மிடம் சொல்லப்பட்டது. சாம்பல் நிற இடைவெளிகள் நிற்கும் இடத்திற்கு ஏற்ப உருவாக்கும் தோற்ற மயக்கங்களே மெய்யென்றும் பொய்யென்றும் மாறிவருகின்றன என்றறிந்திருக்கிறோம். மூளையின் தெளிவுபடுத்தப்பட்ட சிந்தனைகளுக்கும் மனதின் குழப்பமான விருப்பங்களுக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருக்கின்றன நமது தேர்வுகள். என்றாறவது நம் முடிவுகளை எதிர் மனதின் திசையிலிருந்து அடைந்திருக்கிறோமா நாம்?

பெரும்பாலான பொய்கள் பயத்திலிருந்து எழுகின்றன. மீதம் பேராசையின் பொருட்டு. இழப்பின் பயம் உருவாக்கும் பொய்கள் சிறுபிள்ளைத்தனமானவை. அதே நேரம் கோரமானவை. பொய்யென அறிந்தபின் மெளனத்தில் மூழ்கி அதன் காரணங்களைத் தேடியபடி அமர்ந்திருக்கிறீர்களா. மிகக் குரூரமானதும், நகைச்சுவையானதுமான ஒற்றை முகம். அறிதலில் உருவாக்கும் வெளியைக்காட்டிலும், அது உடைக்கும் அறியாமை வெளியினால் பாதிக்கப்படும் பொய்களின் வெளி அதிகம். அத்தனையும் இதற்குத்தானா அத்தனை பெரிய உண்மை இத்தனை சிறிய பொய்யை மறைக்கத்தானா எனும் கேள்விகளை ஒவ்வொருவரும் கடந்து வந்திருப்போம்தானே?

அமைதியைச் சத்தமிட்டுச் சொல்லவேண்டியிருக்கிறது எனும் பிரபல வரியைப்போல, உண்மைகள் பொய்களால் நிறுவப்படவேண்டியிருக்கிறது. சாம்பல் நிற இடைவெளிகளில் நின்றுகொண்டு வெளியேறும் ஒளிகளை உட்பக்கமா திருப்புவதன் மூலம் சிலவற்றை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. சொல்லற்ற மெளனத்தில் ஆழ்ந்திருப்பவர்களிடம் மறைந்திருக்கும் உண்மைகளை சில பொய்க்கதைகளால் தூண்டி வெளியே கொண்டு வரவேண்டியிருக்கிறது. நாடகங்கள், அவற்றை மறைக்கும் திரைச்சீலைகள் இல்லாமல் முழுமை பெறுவதில்லைதானே?