மேகங்கள் சூழ
மரங்களின் நடுவே வீடு.
நள்ளிரவில் விளக்கெரிகிறது.
வீட்டிற்குள் யாராகவும் இருக்கலாம்.
படபடக்கிறது இதயம்.
அது யாருடையதாகவும் இருக்கலாம்.
சிவனோ சக்தியோ திறக்கப்போவது.
கதவைத் தட்டுவோம்.
கை நம்முடையது.
எலும்பும் நரம்பும் புதிரானவை.
பயணத்தில் பாதி இது.
கண் விழித்தபோது ஆடுகளத்தின்
நடுவில் நின்றுகொண்டிருந்தோம்.
மகா விளையாட்டு
விதிகள் புரியாது.
தண்டனைகள் ஏராளம்
பரிசுகளும் ஏராளம்.
சாம்பலை அள்ளி எல்லைக் கோடு.
ஆட்டத்திற்கு முடிவேயில்லை.
கதவைத் தட்டுவதும் திரும்பிச் செல்வதும்
அவரவர் விருப்பம்.

 – அழகுநிலா (இங்கிருந்து)

 

பெரும் விளையாட்டின் நடுவில் விதிகளற்று நின்று கொண்டிருக்கிறோம். நமக்கான பாதைகள் எந்த விதிமுறைகளும் அன்றி நம்மிடம் வந்து சேர்கின்றன. ஏராளமான பாதைகளில் ஒன்றினை நமக்காகத் தேர்ந்தெடுத்து நடக்கத்தொடங்கும்போது பிறபாதைகள் மறைந்த பிறகே நம் பாதையின் விதிகள் வெளிவருகின்றன. மீண்டும் மீண்டும் தோல்விகளாக, தேர்வுகளாக, தேவைகளாக. நமக்கான கதவுகள் திறக்காமல் காத்திருக்கின்றன. ஒற்றைக் கதவில் எல்லா துயரங்களிலிருந்தும் விடுதலையாகிவிடக்கூடும் என நம்பியிருக்கிறோம். ஒற்றைப்பாதையில் நம் பாதங்கள் பூத்துக்குலுங்கும் மலர்களில் சென்று சேரும் என்றே தேர்வுகளை உருவாக்குகிறோம். எல்லாப்பாதையும் எல்லாருக்குமானதில்லை என்றறியும் முன் பாதையில் வெகுதூரம் வந்துவிடுகிறோம் தானே?

 

நமக்கான மனிதர்கள் என எவரையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லோருடனும் இருக்கும்போதும் யாருடனும் இல்லாததாக உணர்ந்திருக்கிறீர்களா? எந்தக்கணத்திலாவது இந்த உறக்கத்திலிருந்து முற்றிலும் புதிய மனிதர்களுடன் புதிய நிலத்தில் எழுந்துவிடவேண்டும் என்ற வேட்கை உருவாகியிருக்கிறதா? நமக்கான காலம் இதுவல்ல, நமக்கான பாதை இதுவல்ல, நமக்கான மனிதர்கள் இவர்கள் இல்லை என்றாவது தோன்றியிருக்கிறதா? எல்லாவற்றையும் நம்மால் வெல்ல முடியுமென்ற ஆணவம் தவிர வேறென்ன காத்திருக்கிறது நம் பயணங்களில்?

 

முடிவற்ற ஆட்டத்தை அவரரர் வசதிக்கேற்ற வகையில் விதவிதமான தேர்வுகளின் மீது விளையாடிக்கொண்டிருக்கிறோம். தன் பாதைகளே அனைத்திலும் கடினமானவை என்ற எண்ணமிருக்கிறது. நம் பாதையின் கதவுகள் நமக்காக ஒருபோதும் திறப்பதில்லை என்றும் திறப்பதில் விருப்பமில்லையென்றும் நேரத்திற்கேற்ற நியாயங்கள் நம்மிடையே இருக்கிறது. துணிவின்மைகள் விருப்பமின்களாக மாற்றி சொல்லப்படுகின்றன. ஆணவங்கள் நேர்மையாக மொழிபெயர்க்கப்படுகின்றன. நாம் திறக்காத, நமக்காகத் திறக்காத கதவுகள் குறித்த கனவு மட்டும் தொடர்ந்து பயணிக்க வைக்கிறதா?

Advertisements

புல்தரையினில் தேங்கி நிற்கும் நீர்நிலை
பூலோக வரைபடத்தின் ஏதோவொரு பெருநிலத்தின்
வடிவத்தை ஒத்து இருந்தது
அருகிலிருந்த நிலத்தின் பனை மரங்களை பிரதிபலித்தபடியே
சட்டென வினவியது ஒன்று
பனைமரங்கள் மிகுந்த புலம் எதுவோ
அதில் தோன்றியிருந்த மீன்குஞ்சுகள்
பனைமட்டைகளை கலைத்து விளையாடின
திடம் யாவும் நீர்போல அதிர்வலைந்து கொண்டிருந்தது
பனையில் வாழ்ந்து வந்த காகம் ஒன்று
வீட்டை காலி செய்தது வீடடையும்போது
குஞ்சொன்று அந்த நீரில் தத்தளிப்பதையும்
மீன்கள் அதை தின்பதையும் கண்டுவிட்டபொழுது
வறண்டுவிட்ட கோடையில் மரம் தின்ற குட்டையின்
தடத்தில் எடையற்ற நண்டின் உயிர்ப்பில்லாத ஓடு
தும்பி உட்கார்ந்த புல்லின் நுனியை அழுந்தியபடியே

– அந்தை ராவதன் (இங்கிருந்து)

கனவுகளில் நமது நிலம் உருவாகி வருகிறது. நமக்கான நிலங்களை, நாம் இழந்த நிலங்களை, நாம் விலகிச்சென்ற நிலங்களை, நாம் கைவிட்ட நிலங்களை நாம் போகும் இடமெங்கும் நினைவுகளில் தூக்கி அலைகிறோம். நமக்கான சிறு நிகழ்வுகள் அந்த நிலங்களில் இன்னும் மிச்சமிருக்கின்றன. நமக்கான சொற்களைச் சொன்னவர்கள், நம்மை உருவாக்கும் வார்ப்புகளைப் படைத்து அளித்தவர்கள் அந்த பழம் நிலத்தில்தான் இன்னும் நமக்காக காத்திருக்கிறார்கள். நாம் திரும்பிப்போகமுடியாத நிலத்தை நமக்கான சிறுகூடுகளில் ஆகச்சிறியதாக கட்டிக்கொள்வதுதான் நம் கனவாக இருக்கிறது இல்லையா?

திரும்பிப்போகும் நிலம் நமது நிலமல்ல. கனவில் உருவாக்கிய நிலமும் நமது நிலமல்ல. நீரில் வரையப்பட்ட கோலமென இடைவிடாது மாறிக்கொண்டிருக்கிறது நிலம். நினைவில் தங்கியிருப்பது மட்டுமே நமக்கான நம் வாழ்விற்கான நாம் விரும்பும் நிலமாக இருக்கிறது. அங்கேதான் திரும்பிப்போக விரும்புகிறோம். அங்கிருந்து கிளம்பியதாகதான் நமது பயணங்கள் நினைவிலிருக்கின்றன. அத்தனை ஓட்டமும் அங்கே நாம் விரும்பியபடி சென்றடைவதற்கான பாதையாகத்தான் நாம் எண்ணிக்கொள்கிறோம். ஒரு போதும் அடையமுடியாத நிலத்திற்கான பாதைதான் நம்மை ஓடவைக்கிறது இல்லையா?

 

நிலம் ஒரு காலத்திலும் பசுமையாக இருந்ததில்லை. அதன் காய்ந்த அரக்கு நிறம் பற்றி அங்கிருக்கும்போது நமக்கு குற்றச்சாட்டுகள் இருந்தது. ஒரு நாள் அங்கிருந்து வெளியேறுகிறோம். புதிய நிலங்களைத் தேடி. புதிய வாய்ப்புகளைத் தேடி. அல்லது வெளியேற்றப்படுகிறோம். அந்த நிலங்களை நம்மிடமிருந்து பறிக்கும்போது. வலுத்தவர்கள் தங்கள் சிலைகளை அதில் நிறுவும்பொருட்டு. வெளியேறிய நிலங்களில் நமக்கான பசுமைகள் தளிர்க்கின்றன. அதுவரை காணாத மலர்கள் பூக்கத்தொடங்குகின்றன. நாம் நினைவில் பதித்திருக்கும் நிலத்தின் பசுமை நிலத்திலிருந்தல்ல. நாம் அங்கே விட்டுவந்திருக்கும் நமது காலடி வேர்களிலிருந்துதான் இல்லையா?

பெயர்கள்

பெயர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
வெள்ளம் வடிந்த நதிக்கரையின்
பாசி பிடித்த கடைசிப்படியில்
மல்லாத்திக் கிடந்த தவளையின்
அடிவயிற்று வெண்தோல் தான்
என்னிடம் சொன்னது,
பெயர்கள் காலமற்றது என்று.
பின் கறிக்கடை பெஞ்சில் அடுக்கி வைத்திருந்த
கன்றின் தலைகளில்
விழிகளில்லாமலிருந்த ஒன்று
என்னை அழைத்து பற்கள் காட்டிய பொழுது தோன்றியது
பெயர்கள் மூலங்களுமற்றது என்று.
பின் சுடுகாட்டு சுடலையின் தலையில்
பேண்டு கொண்டிருந்த
கருஞ்சிறகு சேவல்
சிவந்த சிறகு கோழியின் மேல்
குந்தி உட்கார்ந்தவுடன்
பெயர்கள் இருப்பினைக் கடப்பதைப் பார்த்தேன்.
பின் தவிர்த்துவிடலாம் எதையும், என்ற நினைப்பில்
பாலம் கடந்து
எங்கோடி கண்டனை விளித்து
வம்பழந்து
ஊர்ப்பாடு புலம்பி
முதுகு காட்டிக் கொண்டே
வீடு திரும்பும் வழி முச்சந்தியில்
ரத்தம் சொட்டப்பிளந்து கிடந்த
பூசணிக்காய்தான்
இறுதியில் உண்மையைச் சொன்னது
பெயர்கள் பெயர்களாகவே இருக்க விரும்புவதில்லை என்பதை

-நந்தகுமார்(இங்கிருந்து)

இணையக்காலத்தில் மனிதர்கள் பெயர்களாகச் சுருங்கியிருக்கிறார்கள். அடையாளங்களாக, புனைபெயர்களாக போலிப்பெயர்களாக. உண்மையான பெயர்தெரியாதவர்கள் வெறும் சொற்களின் மூலம் மனதில் ஆழத்தில் இறங்கி அமர்ந்துகொள்கிறார்கள். பின்னணி தெரியாத மனிதர்கள். தலைவர்கள், ஒத்த ஆதர்சங்களின் புகைப்படங்கள் மற்றும் சில புனைப்பெயர்கள். அவர்களின் சொற்கள். இதன் மூலமாகவே அவர்கள் நம்மில் ஒருவராக அடையாளம் கண்டுகொள்ளமுடிகிறது. சில நேரங்களில் பெயர்கள் மட்டும் போதுமானதாக இருக்கிறது. நம் உறவினர்களின் பெயர் கொண்ட முன்பின் அறியாதவர்களிடத்திலும் நமக்கான வாஞ்சை உருவாகிவிடுகிறது. அவர்கள் அடையாளங்கள் நமக்குத் தேவையிருப்பதில்லை. உடனிருப்பவர்களிடம் எதிர்பார்க்கும் எதுவும் இல்லாத ஒருவரை வெறும் பெயரின் காரணத்தினால் நெருங்கியிருக்கிறீர்களா?

பெயர் ஒரு முகமூடியாய் இருக்கிறது சிலருக்கு. சிலருக்கு அது ஒரு நியாபகத் தூண்டி. சிலருக்கு விலகி ஓடும் கணங்களை நினைவூட்டும் வலிகொண்ட முட்கரண்டி. சிலருக்கு மீள்வாழ்வினைக் கொடுக்கும் ஈரக்கரங்கள். இழந்துவிட்ட கணங்களை இழந்துவிட்ட மனிதர்களை இழந்துவிட்ட இடங்களை பெயர்கள் மீட்டுத்தருகின்றன. சில மொழிக்குடும்பங்களில் பிரிந்த இத்தனையாயிரம் மொழிகளில் சில பெயர்கள் தலைமுறைகளைக் கடந்து மிச்சமிருக்கின்றன. ஆதிவேர்ச்சொல் அதிக்குடியின் எதோ ஒரு குறியீடாக இருக்கிறது. தொடர்பில்லாத நிலங்களில் தொடர்பில்லாத தருணங்களில் கண்டடையும் தொடர்புடைய சில பெயர்கள் நம்மை நாம் இல்லாத ஒரு கணத்தில் சில மணித்துளிகள் நிறுத்து பெருமூச்சு கொள்ளச் செய்கின்றன.

அத்தனையும் சொல்லாகவே எஞ்சும். பெயர் மட்டுமே அடையாளமாக, முழு ஆன்மாவாக எழுந்துவரும் தருணங்கள் நிகழ்ந்திருக்கிறதுதானே? எளிய பெயர்கள் கொண்டுவரும் நினைவுகள் எளியவையாக இருப்பதில்லை. காரணங்களற்ற கண்ணீரைத் தொட்டு ஆற்றுப்படுத்திய மனிதர் இறந்து பல்லாண்டு கழித்து வேறொரு உடல்கொண்டு வருகிறார். அவரிடம் சொல்வதற்கான பதில்கள் அத்தனையும் மறந்து வரலாற்றின் எதோ ஒரு கணத்தை நனவிலியின் ஆழத்திலிருந்து எடுத்து அவரிடம் பகிர்ந்துகொள்கிறோம். அவர் எதற்கும் தான் காரணமில்லை என்ற தயக்கத்துடன் , தனக்கே அளிக்கப்பட்ட பாராட்டினைப் பெற்றுக்கொள்பவரைப்போல அந்தப்புகழ்மொழிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் ஒரு நாள். அதே பெயருக்காக கீழ்மைசெய்யப்படலாம். அன்றும் அவருக்கு முதலில் நினைவுக்கு வருவது நமது கதைகள் அன்றி, நமது முகமும் அன்றி, நமது பெயர்தானே?

ஒரு வானமும் சில மழைக்காலங்களும்

மூதாதையர்களின் சிரிப்பொலிகளை
இரவுநேர கதைகளை
ஜெனரேட்டர் ஒலிகளை
நெல்லிக்காய் மரத்திற்காக மழைக்காலத்தில்
வந்துசேரும் பறவைகளை
அடிக்கடி தவறவிடும் வெளிச்சங்களை
தாத்தாவின் குறட்டைச் சப்தங்களை
வெளிக்கம்பியில் தொங்கிக் கொண்டிருக்கும்
அம்மாச்சியின் உடைகளை
மரத்தோம்பு வாளியின் நீர் மேற்பரப்பில்
எப்பொழுதும் மிதக்கும் ஒரு வானத்தை
எல்லாவற்றையும் விழுங்கிய மீதமாக
இறந்தகாலத்தின் ஓசைகளாக
இன்றும் நெளிகிறது ஒரு பழங்கிணறு.
நெல்லிக்காய் மரத்திலிருந்து
இன்று உதிரக்கூடும்
முன்பிருந்த
ஒரு வானமும் சில மழைக்காலங்களும்
நாய்க்குட்டியும் நானும்.

– கே. பாலமுருகன் (இங்கிருந்து)

இறந்தகாலங்கள் என்றும் உதிராத அழகிய மலர்களன நினைவில் மலர்ந்திருப்பவை. உளுத்து உதிர்ந்த மரங்கள், கடல்கொண்ட நிலங்கள், இறந்து மட்கிவிட்ட மனிதர்கள் நினைவில் அவற்றின் பழைய இளமையோடு முடிவிலிக்காலத்தில் நிலைத்திருக்கின்றன. முதியவர்கள் நினைவுகளில் இளமையுடன் இருக்கிறார்கள். திரும்பிச் சென்றுவிட விரும்பும் பழம்பாதையெனும் கனவு காவியங்களை உருவாக்கியிருக்கிறது. அவற்றின் மீதான் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் மீண்டும் மீண்டும் புதிய இலக்கியங்களை உருவாக்கியபடி இருக்கின்றன. இறந்த மனிதர்களின் நினைவுகள் அவர்களின் நிஜமுகங்களை விட அழகான உருக்கொண்டிருக்கின்றன. அறியாத எதிர்காலமன்றி அறிந்த அழிந்த காலங்கள்தானே நம்மை உருவாக்கி இன்றில் நிலைக்கச் செய்கின்றன?

இறந்தகாலத்தின் கதைகளில் மறைந்திருக்கும் ஒற்றை ரகசியமாக கிணறுகள் மாறிக்கொண்டிருக்கின்றன. வீட்டிக்கொன்று ஊருக்கொன்று என்றிருந்தவை இன்றும் கிராமத்தின் வயல்வெளிகளுக்கு நடுவே தங்கள் முகங்களை தென்னையோலைகளால் மறைத்துக்கொண்டு தனித்திருக்கின்றன. அம்மாச்சிகள் இன்று தொலைவில் நகர இடைவெளிகளில் தனித்திருக்கிறார்கள் கிணறுகளைப்போல. சிறுகுடும்ப வகைகளின் ஊடாக தன்னைத்தானே மீறிச்சென்று தனக்குத்தானே வேலிகளை உருவாக்கிக்கொண்டு எங்கோ தனியர்களாக இருவராக எஞ்சியிருக்கிறோம். கிணறுகளின் நீர்ப்பரப்பில் பாசிபடிந்து ஒளிந்திருந்த காலத்தில் ஏறிக்குதித்த கதைகள் இன்று வெறும் புனைவுகளாக மட்டும்தானே எஞ்சியிருக்கின்றன?

நீர் அரசியலாகியிருக்கிறது. வானம் தன் மழைக்காலங்களை மாற்றிவிட்டது. பெய்த பெருமழைகள் இருந்த சுவடின்றி நிலம்குடித்து வறண்டு போகின்றன. நீர் நிலைகளில் வாகனங்களின் ஒலி இடையறாது ஒலிக்கிறது. மழைக்காலங்களில் ஒடுங்கி அமர்ந்து அச்சத்துடன் பார்த்த நீர் எங்கும் தங்காமல் எங்கோ சென்று மறைகிறது. தோளிலிருந்து இறக்கி வைக்கும் முன்னாதாகவே சிறுபிராயங்கள் நடந்து செல்லவேண்டிய கல்விக்கூடங்கள் பெரும் கோட்டைச்சுவர்களுடன் காத்திருக்கின்றன. பிறகு அவர்கள் ஒருபோதும் திரும்பி தன் தோளுக்கு வருவதில்லை என்ற அறிதல்தானே பள்ளி முதல் நாளில் பெற்றோரை இன்று கண்ணீர் துளிர்க்கச் செய்யம் ஆழத்தின் உண்மை?

பார்வைகள்
—————————
பெண் தோழிகளுடன்
பேசும்போதும்
வீசாமல் இருக்க முடிவதில்லை
ஒருக்கணமேனும்
மார்புகளை நோக்கி

பெண் கடவுள்களை
வழிபடுகையில் மட்டும்
கொஞ்சம் கூடுதல்
பயத்துடன்

 

– என். வினாயகமுருகன் (இங்கிருந்து)

 

காமம் சுரப்பிகளின் விளையாட்டு. அவற்றிலிருந்து இதுவரை யாரும் தப்பியதில்லை. விலகி நிற்பதான பாவனைகளுடன் நம்மை நாமே தொகுத்துக்கொண்டு முன்செல்லலாம். உடல் அதன் ரகசிய பாதைகளைத் திறக்கும்போது , ஆழ்மெளனங்களுக்கிடையே பெரும் வாதை உடல்பொருட்டென வெளிவரும்போது, அதன் கனவுகளிலிருந்து நம்மை அடையாளம் காட்டும்போது அதிலிருந்து விலகமுடிவதில்லை. அதன் உபாதைகளை வெளியேற்றிவிட்டதாக அறிவிப்பதும், அதன் கீழ்மைகளைச் சுட்டிக்காட்டி எதிர் நிலைகளை உருவாக்குவதென்பது வெறும் நாடகம் மட்டுமே. அத்தனை பார்வையாடிகளும் பிம்பங்களைத் தலைகீழாகத்தான் பதிவு செய்கின்றன என்றாலும் மூளை அறிவதென்பது அதன் நேர்பிம்பத்தை மட்டும்தானே?

 

எல்லா எளிமையான கவிதைகளும் அதனளவில் சிடுக்குகளை ஒளித்துவைத்திருக்கின்றன. ஓவியத்தின் வண்ணங்களை வண்ணங்களாக அறிவதற்கும் இரு வேறு நிறங்களின் கலவையாக அறிவதற்கும் இடையே ஒரு ஞானத்தின் இடைவெளி இருக்கிறது. காமத்தை காதலென புனிதப்படுத்தும்போது அதன் நிறக்கலவைகளைக் குறித்த அறிதல் கொண்டவர்கள் புன்னகைக்கிறார்கள். அந்த இடத்திலிருந்து வெளியேறிச் செல்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமும் சலிப்புற்றதாகக் காட்டிகொள்வதன் மூலம் அங்கிருந்து நீங்கி விட்டதாக நாடகமிடுகிறார்கள். காமத்தின் திறவுகோலைக் கொண்டவர்கள் இதுவரை வந்திருக்கிறார்களா என்ன?

 

கொலைசெய்யப்பட்ட முன்னோர்கள் நடுகல்லாகத்தொடங்கி பெருமதக்கடவுள்களின் படிமங்களாக மாறுவதற்கு சில தலைமுறைகள் எடுக்கின்றன. நாடகத்தை மீண்டும் மீண்டும் உருவாக்கும்போது ஒவ்வொரு முறையும் அதன் சில முனைகள் கூர்மை கொள்கின்றன. சில முனைகள் மழுங்கித்தேய்ந்து இல்லாமலாகின்றன. இன்றைய இறைவனது முகங்கள் சில தலைமுறைகளுக்கு முன் இப்படி இல்லை. கற்களில் செதுக்கப்பட்ட ஆடைகள் இன்று நூலாடைகளால் சுழற்றி பாதிகாக்கப்படுகின்றன. காமத்தில் விலங்குகளிலிருந்து வெகுதூரம் வந்திருக்கிறோம். கடவுளரில் வெகுதூரம் வந்திருக்கிறோம். ஆனாலும் இந்த இடைவெளி நாடகங்கள் உருவாக்கியவர் என ஒருவரும் இல்லை. எல்லா நாடகங்களும் அடுத்த கைக்குக் கடத்தப்படும்போதுதானே புதுமுகம் பெறுகின்றன?

அடுத்த பிறவியல்
நீங்கள்
யாராக பிறக்கவிரும்புகிறீர்கள்

நம்பிக்கையில்லை

இல்லை
இருந்தால்
பிறந்தால்

ஒரு நாய்க்குட்டியாக

இல்லை
மனிதர்களில்

ம்…
அழுவதற்குமுன்
இறந்துவிடும்
சிசுவாக

– பாண்டித்துரை (வலைப்பூ)

 

பிறவியின் ரகசியங்கள் திறக்கப்படாமல் இருக்கின்றன. வரும் வாசலும் வெளியேறும் வாசலும் மறுபுறம் அறியமுடியாத கதவுகளால் மூடப்பட்டிருக்கிறது. இருத்தலின் காலங்களில் அறிவது கண்ணீரின்  உப்புச்சுவை மட்டுமே. அதன் அடையாளமாக எஞ்சுவது பின்விட்டுச் செல்லும் அலைகளாக கண்ணீரில் கட்டப்பட்டிருக்கும் இன்ன பிற மனிதர்களை மட்டுமே. அழுகையுடன் பிறப்பதற்கும் பிறர் அழச் செல்வதற்கும் இடைப்பட்ட காலத்திலும் நினைவுகளென எஞ்சுவது முடிவற்ற மனிதர்களின் கண்ணீர் மட்டுமே. அன்பென்றும் இணைதலென்றும் பிரிதலென்றும் ஆயிரம் பெயர் சொல்லி அழைக்கிறவர்கள் அடையாளமென மிச்சமிருப்பது கண்ணீர் மட்டும்தானே?

பெரும்பாலான மதங்கள் இந்த ரகசியங்களின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. அத்தனை வலிகளுக்கும் காரணம் வந்த வாசலின் முன் இருந்த முகமென்றும், அத்தனை கொண்டாட்டங்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் அடையவிருப்பது முடிவற்ற கொண்டாட்டமெனவும் நம்பிக்கைகளை உருவாக்குவதன் மூலம் பயத்தினை வெளிச்சம்பாய்ச்சுவதன் மூலம்தான் மதங்கள் உயிர்த்திருக்கின்றன. அத்தனை சொல்லுக்கும் பின்னால் இருப்பது அதிகாரத்தினைக் கைப்பற்றும் வேட்கையென்பது எளிமையான சூத்திரம்தானே. பிறர்கொண்டாட்டங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொடுக்கும் கொண்டாட்டமின்றி மதங்களின் மதப்பூசாரிகளின் செறிந்த வாஞ்சைதான் என்ன?

ஆனாலும் முடிவிலிகளின் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. அத்தனை அனுபவங்களும் நமக்களிப்பது இனி இந்த அனுபவம் வேண்டாம் எனும் அச்சம்தானே. கண்ணீரின் அனுபவங்களிலிருந்து வேண்டுவது கண்ணீரற்ற காலம் குறித்த கனவுகள் மட்டுமே. யாரொ ஒருவர் கையில் ஏந்தும்போது முதல் உறவு உருவாகிறது  ஒவ்வொரு உறவும் சென்று சேர்வது கண்ணீரின் ஒரு பிரிவிற்கு மட்டும்தானா. உறவுகள் அற்ற பிறவி உறவுகளின்மை எனும் காரணத்தையாவது கண்ணீருக்கென வைத்திருக்கிறது. கருவில் அழிவதின்றி கண்ணீர் நம்மை வந்தடையாத கனவில் எப்படி சென்று சேர்வது?

இன்னும் கூட
கடைசியாய் ஒரு வாய்ப்பு
உங்களுக்கு இருக்கிறது

நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கும்
இறந்து கொண்டிருப்பதற்குமிடையில்
கடைசியாய் ஒருவாய்ப்பு

உங்கள் மதுக்கோப்பையிலிருந்து
கடைசிச் சொட்டு உங்கள் நாவை நோக்கி
பேரரருவியென வீழும் முன்னால்

உன்மத்த இசைக்கோவை
உங்கள் மூளைவெளியைத்
தன் நாவால் சுருட்டி விழுங்கும் முன்னால்

இருள் தன் சிறகுகள் வீசி ஒளியின் இறுதிக்கணத்தை
தன் அடி வயிற்று மடிப்புகளில்
மறைத்துக் கொள்வதற்கும் முன்னால்

ஒரு விபத்து தன் குரூரக்கரங்களால்
உங்களை அரவணைக்கும் முன்னால்
அதிகாரக் கொலையாளியின் கரங்களில்
உயிர் குடிக்கும் கைவாளாய்
ஏதுமறியாத நீங்கள் மாறுவதற்கும் முன்னால்

கடைசியாய் ஒரு வாய்ப்பு
வாழ்வின் இக்கணமே காத்திருக்கிறது
நீங்கள் கடந்தும் சென்றிருக்கலாம்
கவனிக்காமலும் சென்றிருக்கலாம்
ஆனாலும் இன்னும்கூட
கடைசியாய் ஒரு வாய்ப்பு.

– உதயசங்கர் (வலைப்பூ)

 

பாதைகளின் சாத்தியங்கள் முடிவற்றவை. தேர்வுகளின் எண்ணிக்கை முடிவிலியென நீள்கிறது. கொடுக்கப்படும் ஒற்றைக்கேள்விக்கு இருக்கும் பதில்களின் எண்ணிக்கை அச்சமூட்டுமளவு பெரியது. அத்தனை கதவுகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்து உள் நுழையும் ஒருவனுக்குக் காத்திருக்கும் முடிவற்ற கதவுகளின் பயணமென வாழ்வு நீள்கிறது. இன்றைய அசைவின் இன்றைய நாளின் ஒரு முடிவிற்கு வந்து சேர இதுவரை திறக்கப்பட்ட கதவுகளின் எண்ணிக்கை அளவற்றது. ஒவ்வொன்றையும் கடந்து செல்லும்போது நாம் விட்டுச் செல்வது நாம் தேர்ந்தெடுக்காத கதவுகளையும் அதன் முடிவற்ற சாத்தியங்களையும் கூடத்தானே?

மரணம் முற்றிலுமாக வேறுவித விளையாட்டு. எந்தத்தருணத்திலும் நம்மை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும் வேல். அத்தனை திருப்பங்களிலும் முடிவற்ற சாத்தியங்களிலும் விடாத பயணங்களின் வழி நாம் சென்று சேர்வதற்காக காத்திருப்பது மரணத்தின் வாசல் மட்டுந்தானே? வாழ்விற்கான அத்தனை சாத்தியங்களும் சாவிற்கான சாத்தியங்களும்தானே? வாசலில் நிற்பவர்களுடன் பேசும்போது கதவுகளில் பிரம்மாண்டத்தை நாம் அறியக்கூடும். எந்தத்தருணத்தில் எந்தக்கதவைத் தவறாகத் திறந்ததால் இங்கு வந்தடைந்திருக்கிறேன் என்று பேசாத வாய்கள் எதாவது மரணத்தில் வாசலில் நின்றிருக்கிறதா?

முடிவிலிகளின் கூட்டுத்தொகையில் நமக்குக் காத்திருப்பது இன்னும் ஒரு துளி எனும் கனவு. இன்னும் ஒரு காலடி. அடுத்த பாதை. முற்றிலிரும் நம் தீயகனவுகளிலிருந்து நம்மை எழுப்பும் ஒரு ஒலி. நம் அறியாத சொற்களில் மறந்திருக்கும் உபகதவுகளின் வழி நம்மைக் கொண்டுசேர்ப்பதற்கான அழகிய பூச்செண்டு. பல நூறு சிறு கதவுகள் கொண்ட பெரும் கதவின் வாசலில் நிற்பதைப்போல நம்முன்னே பூட்டி அமர்ந்திருக்கிறார்கள் மனங்கொண்ட மனிதர்கள். நாம் திறக்கும் கதவுகள் நமக்கான கதவுகள் என்ற நம்பிக்கை தானே வாழ்வை நகர்த்துகிறது?

சுயவிளையாடல்

நீ கேட்ட
பாவனை மலரைக்
கண்டறிந்து வருவதற்கென
அலைந்தபடி இருக்கிறேன்.
என் நிராசைகள்
இரை தேடும்
சர்ப்பங்களாய்
விரைந்து கொண்டிருக்கும்
காமத்தின் வீதிகளில்
என்றபோதும்
சொற்களைக் கலைத்துத்
தன்னோடு தானாடும்
ஆட்டமொன்றை
உட்புறம் தாழிட்ட
அறையினுள்
தொடங்குகிறாய்.

ஒரு
இசைக்கருவியென
மாறுகிறது
உன் உடல்.

– ஆத்மார்த்தி (இங்கிருந்து)

 

காமமென்பது பாவனைகளின் விளையாட்டு. இரு உடல்களை முற்றிலும் திறந்துவைத்து விலங்குகளின் அடையாளங்களை பாவித்து அவற்றின் மனநிலைகளுக்குச் சென்று சேர்வது. உச்சக்கதவின் திறவுகோல்களை வெளியிலிருந்து அன்றி உள்ளாகவே ஒளித்து வைத்திருப்பது. சிறிது பாவனைகளின்றி சிறிது புனிதப்பூச்சு கொண்ட காதலன்றி காமம் நிறைவுருவதே இல்லை. சற்று விளையாட்டுகள் அதீதத்தின் முகங்களைக் கொண்டிருக்கக்கூடும். பாவனைகளற்ற வாழ்வை நோக்கி பயணத்திலிருக்கும் யோகிகள் காமத்தை விளக்குவதாகச் சொல்வது பாவனைகளால் உருவாக்கப்பட்ட காமத்தின் முகத்தை முற்றும் அறிந்ததால் மட்டும்தானே?

பதின்மத்தில் உடல் ஒளிகொள்ளத் தொடங்குகிறது. ஒளித்து வைத்திருந்த ரகசியங்களை வெளிக்காட்டத்தொடங்குகிறது. கதைகள் காட்சிகள் மறை நிலங்களின் பாவனைகளின் வழியாக தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு உடல் இனப்பெருக்கத்திற்குத் தன்னைத் தடைசெய்து கொள்கிறது. மேடான நிலங்களில் நீண்டு உயர்ந்த கம்பங்களில் தனக்கான பாவனைகளை பால்பேதம் கொண்ட உடல் கண்டடைகிறது. இடைவெளிகளை புனைவுகளால் இட்டு நிரப்பும் நாடகமன்றி உடல் மனதிற்கு காமத்திற்கு வேறெந்த வழியிலும் காட்டிவிட முடியாது. இதற்குத்தானா இத்தனையா என்ற கேள்வியின் மீதான பாவனைதானே உறவுகளை நீண்டு தொடரச் செய்கிறது?

 

எல்லா பாவனைகளையும் ஒரு நாள் கழற்றி வைக்கவேண்டியிருக்கிறது. எல்லா நாடகங்களும் நிறைவடைவதற்காக உருவாக்கப்பட்டது. அத்தனை முகங்களின் வழியாக அத்தனை பாவனைகளின் வழியாக தன்னைத்தானே உருவாக்கிக்கொள்வதின் மூலம் உருவாக்கி வைத்திருக்கும் மணற்கோட்டைகள் சரிந்து வீழ்வதற்கானவை. அல்லது சிறிய முகங்களின் மூலம் நாம் உருவாக்கும் சிறிய நாடகங்கள் ஆழ்மெளனத்தின் காலங்களுக்காக முடிவற்று நீள்பவையாகவும் இருக்கலாம். மாமலர் கனவுகள் ஒரு நாள் உதிருமென்பதையும் மரங்கள் அறிந்திருக்கின்றன. கூடவே அத்தனை கொண்டாட்டத்துடன் அந்த மலரைத் தாங்கும் பாவனை அன்பும் கூடத்தான் இல்லையா?

பாதை தொலைத்த நாய்கள்

கிராமத்தை
நெடுக்காக பிளந்து செல்லும்
நெடுஞ்சாலையை
கடக்க காத்திருக்கும்
அவள்
நேற்றைய மழையில் துளிர்த்த
பசுந்தளிர் ஒன்றைக் கிள்ளி
உள்ளங்கையில் வைத்திருக்கிறாள்
வியர்வையில் கசங்கிக் கொண்டிருக்கும் அது
நசுங்கிக் கிடந்த நாயொன்றை நினைவுபடுத்துகிறது
பதட்டத்தில் தளிரை வீசியெறிந்தவள்
நெடுஞ்சாலைகளில் மரிக்கும் நாய்களுக்காக
ஒரு கணம் மெளனிக்கிறாள்
மணிக்கு நூற்றியிருபது கிலோமீட்டர் வேகத்தில்
அவளைக் கலைக்கிறது
கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ.

– வா.மணிகண்டன் (இங்கிருந்து)

 

கைவிடப்பட்ட மனிதர்கள் நமக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள். அகங்காரத்தின் எளிய சொற்களில், அழகிய பொய்களில், சிறு அசைவுகளில் விலக்கப்பட்டவர்கள் நாம் விட்டு வந்த இடத்திலேயே நின்றிருக்கிறார்கள். அவர்களை நாம் திரும்பிப்பார்க்க விரும்புவதில்லை. அவர்களின் இடங்களுக்குத் திரும்பிச்சென்று மன்னிப்புக்கோர நம் அகங்காரங்கள் நம்மைத்தடுக்கின்றன. தற்செயலான சந்திப்புகளில், ஏற்படுத்தப்பட்ட சந்திப்புகளில் ஏற்படுத்திக்கொண்ட சந்திப்புகளில் எளிமையான புன்னகைகளை அளிப்பதன் மூலம் அவர்கள் நம்மை மன்னித்துவிட விரும்புகிறோம். தொலைவின் பாதைக்கிளையில் நிற்கும் ஒருவரை இருவரும் நகராமல் சந்தித்துக்கொள்ளமுடியுமா என்ன?

விலக்கியவர்களைச் சந்திக்கும்போது நம்மால் விலக்கப்பட்டவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். அவர்களின் சொற்கள் நாம் ஏற்கனவே சொல்லியவற்றின் பிரதியாக இருக்கின்றன. நாம் அளிக்கும் விருந்துகள் அதே மணத்துடன் நமக்கு திருப்பி அளிக்கும்போது குறைபாடுகள் தெரிகின்றன. நம் அடையாளங்களைப் பிறர் சொல்லும்போது நாம் சொல்லிய அடையாளங்கள் குறித்த தாழ்வுணர்ச்சி எழுகிறது. சுழற்படிக்கட்டுகளின் ஒரு முனையில் ஏறிக்கொண்டிருப்பவர்கள் மறுமுனையில் இறங்கிக்கொண்டிருப்பவரையும் சேர்த்துதானே அறிகிறார்கள்?

புறக்கணிப்புகளை விட அதிக வலியூட்டுவது அதைச் சொல்லியழ இல்லாமல் போன தோள்கள்தானே? தோளிலிருந்து தோள்தாவும் சிறு குழந்தையென இருக்கிறோம். சென்று சேர தோள்கள் இன்மைதானே பெருஞ்சத்தத்துடன் நிகழும் வீழ்ச்சியாக இருக்கிறது. எல்லா வலிகளையும் இன்னொரு வலியால்தான் நிறைவு செய்யமுடிகிறது. எல்லா நினைவுகளையும் விலகுதலின் மூலமாகதான் கூர்மை கொள்ளச்செய்யமுடிகிறது. காரணமானவர்களை விட கண்டுகொள்ளாமல் இருப்பவர்களால்தானே நிகழ்கிறது விலகுதல்களின் இறுதிப்பயணம். சொற்களில் இறக்கிவைக்காத இறக்கிவைக்க முடியாத சுமைகள்தான் மனங்களைச் சிதறடித்திருக்கிறது இதுவரை? மெளனத்தின் சடங்குகளில் நிகழ்வது அன்பின் கடைசி உதிரபலி என்பதை அறியும் அகங்காரமென ஒன்று இருக்கிறதா என்ன?

நூற்றாண்டின் தூசி

நான்கைந்து நூற்றாண்டுகளின் ரேகைகள் படிந்திருக்கும்
மாளிகைக்குள் நுழைகிறீர்கள் எனில்
அந்தந்த நூற்றாண்டுகளுக்குள் நுழைகிறீர்கள்.
ஒவ்வொரு படியும் உங்களை ஒவ்வொரு வடருமாக
மேல்தூக்கி அழைத்துப் போகிறது.
முன்னிருக்கும் முதல் நூற்றாண்டைக் கடந்துபோகும்போது
ஊஞ்சலாடும் சிறுமிக்கு உதவுகிறீர்கள்.
பாடம் செய்யப்பட்டு அருகருகே மாட்டப்பட்டிருக்கும்
சிங்கத்துக்கும் மானுக்கும் இடையில்
அந்த ஊஞ்சல் மிக லாகவாமாக முன்-பின் போய் வருகிறது.
அடுத்த நூற்றாண்டின் உத்தியாவனத்தில் இறங்குகிற நிலவொளியில்
தனிமை ஒரு ராஜகுமாரியாக உலவித் திரிய
அதன் இடது அறையில் தளும்பும் ரகசிய சிணுங்கலொன்றில்
உங்கள் குரல் கேட்டுத் துணுக்குற்று நிற்கிறீர்கள்.
மூன்றாம் அடுக்கிலிருக்கும் நூற்றாண்டின் சன்னல் வழியாக
உற்றுக்கேட்கும்போது தூரத்தில் அதிரும் குளம்பொலிக்கேற்ப
நுணா மரத்தடியில் ஏறி இறங்குகிறது மார்க்கச்சை ஒன்று.
நான்காம் அடுக்கின் நுழைவாயிலில் மாட்டப்பட்டிருக்கும்
வாளிலிருந்து சொட்டும் ரத்தத்துளிகளைப் பார்த்துவிட்டு
சடசடவெனக் கீழிறங்கி வந்துவிடும் நீங்கள்,
செய்யவேண்டியது ஒன்றேயொன்றுதான்.
தலையில் ஒட்டியிருக்கும் காலாதிகாலத்தின் தூசியை
உடனடியாகத் தட்டிவிட்டு விடுங்கள்.

– கதிர்பாரதி (இங்கிருந்து)

வரலாற்று அடையாளங்களின் நிழலில் நிற்பது ஒரு அழகிய பயிற்சி. பெருங்காலத்தின் கண்ணாடியின் முன்பாக நின்று நம்மை நாமே திரும்பிப்பார்ப்பது. நம்மை மிகச்சிறியதாக உணரச்செய்வது. நம் அகங்காரங்களை பொருளற்றதாக உணரச்செய்வது. நம்மை சிறியவராக நம்மையே கீழ்மைகொள்ளச்செய்வது. இன்று நிகழும் தவறுகள் புதிதல்ல என்று ஆறுதல் சொல்வது. இன்றைய வெற்றிகள் காலத்தின் முன் எந்த பெருமையுமற்று அழிந்துபோகக்கூடியவை என நினைவூட்டுவது. வரலாற்றுப்பெருமிதங்களும் வரலாற்று அழிவுகளும் ஒரே முகத்துடன் காலத்தின் முன் நிற்கின்றன என்பதை எப்படி புரிந்துகொள்வது?

நமக்கு வரலாற்றின் மீது அக்கறையில்லை. அதன் அடையாளங்களைப் பாதுகாப்பதின் தேவைகள் குறித்த அறிதல்கள் நம்மிடையே குறைவு. காலந்தோறும் மாறிக்கொண்டிருக்கும் வாய்சொல் கதைகளன்றி நம்மிடையே சரியான தரவுகள் அறிவுகள் படைப்புகள் உருவாவதில்லை. காலத்தை நாம் பின்விட்டு வெளியேறிச்செல்ல விரும்புகிறோம் எனத்தோன்கிறது. வாய்மொழி வரலாறுகள் அளிக்கும் புனைவு சாத்தியங்கள் நம்மை அவ்வாறு தூண்டுகின்றன. நாம் விரும்பும் வரலாற்றினை நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ளத்தான் நிஜ வரலாறுகள் அழிவதை நாம் விரும்புகிறோமா?

வரலாறென்பது ஒருபோதும் திரும்பமுடியாத ஒரு பாதை. அங்கே அதன் புனிதங்களில் நாம் ஒருபோதும் சென்று சேர முடியாது. அன்றைய லட்சியவாதங்கள் இன்றைக்கு காலாவதியானவை. அன்றைய பெருமைகள் இன்று அர்த்தமற்றவை. அன்றைய பெயர்களுக்கு இன்றைக்கு எந்த மதிப்புமில்லை. எத்தனை கூர்மையுடன் வரலாற்றினை பதிவுசெய்கிறோமோ அதே கூர்மையுடன் அதிலிருந்து இன்றைய கண்ணாடிகளுடன் நாம் வெளியேறவும் வேண்டியிருக்கிறது. தோல்வியிலிருந்து கற்பதன்றி வெற்றிகளுக்குத் திரும்பும் எத்தனங்கள் அத்தனை நிலங்களிலும் இதுவரை அழிவுகளை மட்டுமே உருவாக்கியிருக்கிறது. வரலாற்றின் வெற்றிகளுக்குத்திரும்புவதை விட, வரலாற்றின் தோல்விகளிலிருந்து கற்பதே தேவையாயிருக்கிறது. நேற்றைய கனவென்பது இன்றைய வாழ்விலிருந்து நாளையின் வரலாற்றை உருவாக்குவதுதானே?